திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தின் கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், திறன் களம் என்ற தலைப்பில், மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில், தலைமை விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் -இந்திய நிறுவன மேம்பாட்டு சேவை இணை இயக்குனர் கடடே ரவி பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில், இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, 60 அரங்குகள் அமைத்து, தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிப்படுத்தினர்.
தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிதியுதவியுடன், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாமும் நடந்தது. இதில், ஒன்பது தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.