பார்சிலோனா:வருவாய் குறைந்துள்ளதால், மொபைல் போன் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த, 'ஏர்டெல்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொலைத்தொடர்பு வணிகத்தின் மூலதனம் மீதான வருவாய் குறைந்துள்ளதால், இந்தாண்டு மத்தியில் தங்களது சேவைக் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்து உள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பார்சிலோனாவில் 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த ஏர்டெல்லின் தலைவர் பார்தி மிட்டல் கூறியதாவது:
தொலைத்தொடர்பு வணிகத்தில், அதிகளவில் மூலதனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான வருவாய் என்பது குறைவாக உள்ளது. இதை மாற்ற வேண்டும்.
அதற்காக இந்தாண்டு மத்தியில், ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைக்கான கட்டணங்களை, சிறிதளவு உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த கட்டண உயர்வு, அடித்தட்டு மக்களை பாதிக்கும் என்பதில் உண்மையில்லை.
மக்கள் பிற விஷயங்களுக்காக செலவிடும் பணத்துடன் ஒப்பிடும் போது, இந்த கட்டண உயர்வு குறைவு தான். மக்களுக்கான சம்பளம் உயர்ந்துள்ளது.
வாடகை உயர்ந்துள்ளது. ஆனால் அதைப்பற்றி யாரும் குறை கூறவில்லை.
தற்போது, மக்களுக்கு கட்டணமே இல்லாமல் 30 ஜி.பி., வரையிலான 'டேட்டா' இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டின் கனவான டிஜிட்டல், பொருளாதார வளர்ச்சி நனவாகி உள்ளது.
வலுவான தொலை தொடர்பு நிறுவனம் தேவை என்பதில் அரசு விழிப்புணர்வுடன் இருக்கிறது. இதைப்போல மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இதனால் அடித்தட்டு மக்களுக்கு கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.