சென்னை:பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி, 69, உடல்நல குறைவு காரணமாக, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இளைய சகோதரர், பிரகலாத் தாமோதர தாஸ் மோடி. இவர், சில மாதங்களாக, ஆன்மிகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கன்னியா குமரி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் தமிழகம் வந்துள்ளார்.
அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர், நலமாக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து, சுற்றுப் பயணத்தை தொடருவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.