உடுமலை;ஆண்டு முழுவதும், மூலப்பொருள் சீராக கிடைக்கவும், கூட்டுறவு சங்கங்கங்கள் வாயிலாக கடன் உதவி வழங்கினால், மங்கள கயிறு உற்பத்தி தொழில் மேலும் சிறப்படையும். தமிழக அரசு இத்தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் ஊராட்சி வரதராஜபுரம் மற்றும் பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில், பாரம்பரியமாக மங்கள கயிறு தயாரிக்கும் பணியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, தாலிக்கயிறு மற்றும் கோவில்கள் வழங்கப்படும் மங்கள கயிறுகளை உற்பத்தி செய்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
ஆண்டு முழுவதும், வரதராஜபுரம் கிராமத்தில், மங்கள கயிறு உற்பத்தி செய்யப்படுவதால், கிராமமே வண்ணமயமாக காட்சியளிக்கும்.
இப்படித்தான் உற்பத்தி
சோமனுார் பகுதியிலுள்ள 'சைசிங்' மில்களில், மங்கள கயிறு தயாரிப்புக்கான நுாலை வாங்குகின்றனர். குறிப்பாக, 40 கவுன்ட் நுால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சைசிங், பருத்தி நுால் மற்றும் நைலான் நுாலும் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நுாலை ராட்டைகளை பயன்படுத்தி, சீர்படுத்தி, வண்ணமேற்றிய பிறகு, கயிறுகளை திறந்தவெளியில் காய வைக்கின்றனர்.
மெலிசு உட்பட நான்கு வகையாக கயிறுகள் உற்பத்தி செய்து, பண்டல்களாக கட்டுகின்றனர். உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் விற்பனைக்கு தகுந்தவாறு, பண்டல்கள் மாறுபடுகிறது.
மூலப்பொருளுக்கு சிக்கல்
கடந்த சில மாதங்களாக, நுாற்பாலைகள் மற்றும் சைசிங் மில் மற்றும் விசைத்தறிகளில், பல்வேறு காரணங்களால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மூலப்பொருள் கிடைக்காமல், மங்கள கயிறு உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, 40 கவுன்ட் நுால் கிடைக்காமல், 200 கவுன்ட் நுால் மட்டுமே கிடைக்கிறது; இவ்வகை நுாலில் தரம் குறைவதால், மங்கள கயிறு விற்பனை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால், குறித்த நேரத்தில், ஆர்டர்களை முடிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குடும்பத்தினர் அனைவரும், உற்பத்திக்கான பணியில், ஈடுபடுகின்றனர்.
அரசு உதவி தேவை
மங்கள கயிறு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், பாரம்பரிய தொழிலை கைவிடாமல், தொடர்கிறோம். கடந்த ஓராண்டாக மூலப்பொருள் விலை சீராக இருப்பதில்லை; தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
இதனால், கயிறு விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு மூலப்பொருள் வாங்க முடிவதில்லை. கடனுதவியும் கிடைக்காமல், உற்பத்தியை கைவிடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கிறது.
பிரத்யேகமாக மேற்கொள்ளப்படும் இத்தொழிலுக்கு, தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடனுதவி வழங்க வேண்டும். மேலும், 'சைசிங்' நுால் சீராக கிடைக்கவும், விலை ஏற்ற, இறக்கம் இல்லாமல், நிலையாக இருக்கவும், அரசு உதவி செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், இத்தொழில் நலிவடைந்து, பலர் மாற்றுத்தொழிலுக்கு செல்லும் சூழல் உருவாகும்.
அனைவருக்கும் 'மங்களம்' பெருக கயிறு தயாரிக்கும் தொழிலில், நிலவும் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு ஏற்படுத்தினால், எங்கள் வாழ்விலும் மங்களம் பெருகும். இவ்வாறு, தெரிவித்தனர்.