சென்னை:'மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
கொடூரம்
தமிழக மீனவர்கள்ஆழ்கடலில் மீன் பிடித்தபோது, இலங்கை படகில் வந்த சிலர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் உட்பட, ஆறு பேரை கொடூரமாக தாக்கினர். அவர்களிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர, இலங்கை அரசை வலியுறுத்துமாறு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, சமீபத்தில் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, ஜெய்சங்கர் அனுப்பியுள்ள கடிதம்:
நாகை மாவட்ட மீனவர்கள் மீது, இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், அந்நாட்டு அரசின் கவனத்திற்கு உடனே எடுத்து செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கவலையை வெளிப்படுத்தியதுடன், இந்திய மீனவர்களுக்கு எதிரான, எந்த ஒரு வன்முறையையும் ஏற்க முடியாது என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், சம்பவம் குறித்து இலங்கை தரப்பில் இருந்து விபரங்கள் கேட்கப்பட்டு உள்ளன.
நன்றி
இந்திய மீனவர்கள் தொடர்பான விஷயங்கள், அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து, அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.