புதுடில்லி:புதுடில்லியின் சாலையோர தேநீர் கடையில், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ், தேநீர் அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மன் பிரதமராக ஓலப் ஸ்கோல்ஸ் பதவி ஏற்ற பின் முதல்முறையாக, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக, கடந்த 25ம் தேதி புதுடில்லி வந்தார்.
இங்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகள் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.
புதுடில்லியில் உள்ள ஜெர்மன் துாதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு பிரதமரை, சாணக்கியபுரியில் உள்ள சாலையோர தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழங்கப்பட்ட தேநீரை, பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் ரசித்துக் குடித்தார். இந்தப் படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
'ருசியான தேநீரை சுவைக்காமல் இந்தியப் பயணம் முழுமை பெறாது. எனவேதான், எங்களுக்கு மிகவும் பிடித்த தேநீர் கடைக்கு, பிரதமர் ஓலப் ஸ்கோல்சை அழைத்துச் சென்றோம்' என, புதுடில்லியில் உள்ள ஜெர்மன் துாதரக அதிகாரிகள் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.