ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில்டாக்டர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிஅடைகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
டாக்டர் பற்றாக்குறையால் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால், அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்துக்களில் காயம் அடைவோரை ராமநாதபுரம் அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட இரவில் டாக்டர்கள் இல்லாததால், ஏற்படும் கால விரையத்தால் விபத்துக்களில் சிக்குபவர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கூடுதல்டாக்டர்களை நியமிப்பதுடன், பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் காட்சி பொருளாக உள்ள எக்ஸ்ரே உள்ளிட்ட, மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தினர்.