கோவ:கோவை கலெக்டரின் உத்தரவை மீறி, மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்திருப்பதால், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி அருள்முருகன் நகர், காந்தி நகர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். குறிப்பாக, இப்பகுதிகளில் வசிக்கும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், அமைதியை இழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு நிலம் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கி, நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. சில குடும்பத்தினர் இன்னும் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதால், மின் இணைப்பு துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி அருள்முருகன் நகர், காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து, 'தங்களது குழந்தைகள் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கின்றனர். மின் இணைப்பு துண்டித்தால் கல்வி பாதிக்கும்.
பொதுத்தேர்வு வரை, மின் இணைப்பு துண்டிப்பதில் இருந்து, மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்' என முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறை அலுவலர்கள், அப்பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர்.
நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள வீடுகளுக்குச் சென்று, பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இருக்கிறார்களா; என்ன படிக்கிறார்கள்; வாடகை வீடா, சொந்த வீடா என கேட்டறிந்துள்ளனர்.
அப்போது, 'மாணவ - மாணவியர் இருந்தாலும் வாடகை வீடாக இருந்தால் காலி செய்ய வேண்டும்; சொந்த வீடாக இருந்தால் மட்டுமே சலுகை அளிக்கப்படும்' என அரசு அலுவலர்கள் கூறியதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், 'மாணவர்கள் வசிப்பது வாடகை வீடாக இருந்தால், கண்டிப்பாக காலி செய்ய வேண்டுமென நிர்பந்திக்கின்றனர். தேர்வு நடக்கும் சமயத்தில் வேறிடத்துக்கு இடம் பெயர்ந்தால், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவர்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு உரிய நேரத்துக்குள் சென்றடைய முடியாது. எங்கள் நிலையை புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர்' என்றனர்.
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டபோது, ''தேர்வு முடியும் வரை, மாணவர்கள் வசிக்கும் வீடுகளை தவிர்த்து, மற்ற கட்டடங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்,'' என்றார்.
கலெக்டர் உத்தரவை மீறி, மாணவர்களாக இருந்தாலும் வாடகை வீட்டில் வசித்தால் கண்டிப்பாக காலி செய்தாக வேண்டுமென, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.