புதுச்சேரி : தொழில் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு மக்களிடம் நம்பகத்தன்மையை நாள்தோறும் இழந்து வருகிறது.
மாநில மக்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் திட்டங்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி முதல்வர் அனுமதி அளித்து வருகிறார். மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, கவர்ச்சி நடன மதுபார்களுக்கு அனுமதி, மின்துறை தனியார் மயம் என மாநில மக்கள், அரசு ஊழியர்களின் நலனுக்கு எதிரான திட்டங்களை சிறிதும் அச்சமின்றி தொடங்குகிறார்.மாநில நிதியை பெருக்க மக்களை பாதிக்கும் திட்டமாக இருந்தாலும் நான் அனுமதியளிப்பேன் என பேசி வருகிறார்.
எனவே,அமெரிக்கா, துபாய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை மாநில மக்களுக்கு, இளைஞர்களுக்கு ஆக்கப்பூர்வமான நோக்கில் நடந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
இந்த சந்திப்பு சுயநல நோக்கின்றி மாநில மக்களின் நலனுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் இருக்க வேண்டுமே தவிர, ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் திட்டங்களாக இருக்கக்கூடாது.
எனவே புதுச்சேரி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தியது, அவர்களுக்கு தரப்போகும் சலுகைகள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இதற்காக பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.