மதுரை:'யானைகளை வாங்கக்கூடாது' என, தமிழகத்தின் அனைத்து கோவில்களுக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேனியைச் சேர்ந்தவர் ஷா. இவர், லலிதா என்ற பெண் யானையை வாங்கி பராமரித்தார். அதன் மீதான உரிமையை மாற்றம் செய்யக்கோரி, சென்னை முதன்மை வனப் பாதுகாவலருக்கு மனு அனுப்பினார்; அவர் நிராகரித்தார். அதை எதிர்த்து, ஷா உயர் நீதிமன்றத்தில், 2020ல் மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'லலிதா யானையை தொடர்ந்து ஷா பராமரிப்பில் வைக்க அனுமதிக்கப்படுகிறது. சூழ்நிலை கருதி தேவைப்பட்டால், நீதிமன்றத்தை நாடலாம்' என, 2020ல் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த யானை கீழே விழுந்து காயமடைந்தது; முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.
அது பற்றிய அறிக்கை, போட்டோக்களை பராமரிப்பாளர்கள், அவ்வப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அனுப்பினர்.
விருதுநகர் விலங்குகள் நல ஆர்வலர் சுனிதா, சென்னை பிரேமா ஆகியோர், யானையின் உடல்நிலை குறித்து தகவல் அனுப்பினர். நீதிபதி கடந்த, 26ல் லலிதா யானையை பார்வையிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
வன விலங்குகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மதுரை கால்நடை டாக்டர் கலைவாணன், யானை லலிதா பூரண குணமடையும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும்.
அவரது பரிந்துரைப்படி லலிதாவுக்கு தேவையான உணவு, மருந்து, தகுந்த மாற்று இருப்பிடம் வழங்க, விருதுநகர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம், 'வளர்ப்பதற்காக யானைகளை வாங்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
பல கோவில்களில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் யானைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அவை, 24 மணி நேரமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் உள்ள பாகன்களால் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன. சித்ரவதை தாங்க முடியாமல், யானைகள் சில நேரங்களில் கோபமடைந்து வன்முறையில் ஈடுபடுகின்றன.
அனைத்து கோவில்கள், தனியார் யானைகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆய்வு செய்ய வேண்டும்.
'தனி நபர்களோ அல்லது மத நிறுவனங்களோ யானைகளை இனி வாங்கக்கூடாது' என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டும்.
இனி, யானைகளை வாங்கக்கூடாது என தமிழகத்தின் அனைத்து கோவில்களுக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.---
'தமிழகத்தில் கோவில் மற்றும் தனியார் வளர்ப்பு யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.'கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் ஓய்வின்றி விழாக்களுக்கு அழைத்து வரப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை 'பார்வதி' உட்பட உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து கோவில், வளர்ப்பு யானைகளையும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்ப வேண்டும்' என, நம் நாளிதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிடுகிறது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோவில், வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.