திருநெல்வேலி:காருக்கு புகைச் சான்றிதழ் வழங்க அதிக கட்டணம் வசூலித்த நிறுவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.) ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 2019 அக். 21ல் தன் காருக்கு புகைச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புகைச் சான்றிதழ் வழங்கும் நைஸ் பேனல் எமிஷன் நிறுவனம் ரூ. 200 கட்டணம் வசூலித்தனர். ஆனால் ரூ. 50க்கு மட்டுமே ரசீது தந்தனர். இது குறித்து கிருஷ்ணன் கேட்டபோது அவதுாறாக பேசினர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் செய்தார். அதற்கு அவர் 'இதுபோல ஆயிரம் புகார்கள் வருகிறது இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என கூறியுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர். இந்த தொகையை புகைச் சான்று வழங்கிய நிறுவனம் ஆர்.டி.ஓ. தனித்தனியாகவோ இணைந்தோ வழங்கலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.