திருப்பூர்:'நாட்டின் வளர்ச்சி என்பது தாரக மந்திரம்', என வெள்ளகோவிலில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பேசினார்.
வெள்ளகோவில், மூலனுார் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கழிவு பஞ்சாலை சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்க செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் பேசியதாவது:
ஜவுளித்துறை என்பது முக்கியமானதாக பிரதமர் பார்வையில் இருந்து கொண்டிருக்கிறது. ஜவுளி துறைக்கு, மத்திய அரசு ஒருபுறமும், மாநில அரசு ஒரு புறமும் என, இரண்டும், இரு கண்களாக பார்க்க வேண்டும். சிலவற்றை மாநில அரசு மூலமாக கூட பெற்றாக வேண்டும்.
மத்திய அரசு, பல்வேறு இடங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுபோல் நாம் இணக்கமான விஷயத்தை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறோம். கரூரில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்த போது பல்வேறு ஆச்சரியமான முறையில், பல தொழில்களை செய்கின்றார்கள் என அறிய முடிகிறது.
நம் பொருளாதார வளர்ச்சி என்பது உலகமே வியந்து பார்க்கின்ற அளவில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நாம், ஐந்தாவது இடத்தில் இருக்கின்றோம். பிரிட்டனை பின்னுக்கு தள்ளி நாம், இந்த இடத்துக்கு வந்துள்ளோம். 'ஜி20' மாநாட்டை இந்திய தலைமை ஏற்று நடத்தி கொண்டிருக்கிறது. இது நமக்கு பெருமையான விஷயம்.
விவசாயத்துறை நமது நாட்டுக்கு எப்படி முதுகெலும்பாக இருக்கிறதோ, அதுபோல் இந்த ஜவுளித்துறை உலக அளவில் இந்தியாவை பெருமைபடுத்துகிற நாள் நிச்சயமாக அமையும். நம் பிரதமரின் நோக்கம், எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்குமான வளர்ச்சி என்பது தான் தாரக மந்திரம்.
இவ்வாறு அவர் பேசினார்.