சென்னை : செம்மொழி பூங்காவில், கடந்த இரு ஆண்டுகளை விட இந்தாண்டில், பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கடந்த, 2010ம் ஆண்டில், 7.96 கோடி ரூபாய் செலவில் செம்மொழி பூங்காவை அமைத்தது. இதன் மொத்த பரப்பளவு, 7.92 ஏக்கர்.
இங்கு, 700க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை உட்பட, இந்த பூங்காவில், ஏராளமான தாவர வகைகள், காண்போரை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இதன் நுழைவு வாயில், பிலோடென்ட்ரான், சிங்கோனியம், ஒப்பியோபோகான் உள்ளிட்ட, 35 வகை தாவரங்களை கொண்டு, செங்குத்து தோட்டமாக அமைந்துள்ளது.
இங்கு விளாம்பழம், மாதுளை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, மா, அருநெல்லி, பெருநெல்லி உள்ளிட்ட மரங்களை கொண்ட 'போன்சாய்' தோட்டம் சிறப்பம்சமாக உள்ளது.
இங்கு வடேலியா டிரைலோபேடோ, குபியா, அராச்சிஸ் உள்ளிட்ட அலங்கார புதர் செடிகள், கோல்டன் பாட்டில் பிரஷ், முள் முருங்கை, தண்ணீர்க்காய் போன்ற மர வகைகள், நீரியம், ஓபியோபோகான், ஜை பிரான்டியஸ் அல்லி உள்ளிட்ட அழகு மலர்ச்செடிகள், பல்வேறு வகைகளில் காணப்படுகின்றன.
சிறுவர்கள் விளையாடி மகிழ, விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சமாக, 500 பேர் வந்து செல்கின்றனர்.
வார இறுதி நாட்களில், இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்.
இந்த பூங்கா உருவாக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புனரமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் பெரிதாக மேற்கொள்ளப் படவில்லை.
இதனால், சில ஆண்டுகளாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. கொரோனா காலகட்டத்தில், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது.
கடந்த சில மாதங்களாக, இந்த பூங்காவில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், சமீப காலமாக, பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2021 ஏப்., மாதம் துவங்கி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பார்வையாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 6 ஆயிரத்து 584.
இந்நிலையில், கடந்த 2022 ஏப்., துவங்கி, இந்தாண்டு பிப்ரவரியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டி விட்டது.
இன்னும் ஒரு மாதத்தில், மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, 2.50 லட்சத்தை விட அதிகரிக்கும். இங்கு பார்வையாளர்கள் மட்டுமின்றி சினிமா, குறும்படம், சீரியல் உள்ளிட்ட படப்பிடிப்புகளுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது பூங்காவை பொலிவாக்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இன்னும் இரு மாதங்களில், இந்த பூங்கா புதிய தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளது.
இதனால், அடுத்தாண்டில், பார்வையாளர்களின் எண்ணிக்கை, இன்னும் கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.