சென்னை : கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி தடத்தில், நடேசன் பூங்காவில் அமைக்க இருந்த நிலையம் கைவிடப் படுகிறது.
சென்னையில் இரண்டாவது கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 118 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.
இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி தடத்தில் 26.1 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டப் பணி துவங்கப்பட்டுள்ளன. இத்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பாலம் வரை சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில், மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தி.நகர் பகுதியில் அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவதால், நடேசன் பூங்காவில் அமைக்க இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தை கைவிட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் தடத்தில், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நடேசன் பூங்கா 625 மீட்டர் துாரமே இருக்கிறது. அடுத்துள்ள பனகல் பூங்காவும் குறுகிய துாரத்திலேயே இருக்கிறது.
எனவே, சுரங்கப் பாதையில் அமைக்க இருந்த நடேசன் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் கைவிடப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.