வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், தன் 70-வது பிறந்த நாளை, இன்று(மார்ச் 1) கொண்டாடுகிறார்.
நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் இருந்தும், மூன்றாவது மகனான ஸ்டாலினைதான், தி.மு.க., இளைஞரணி செயலர், பொருளாளர், சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வர் என, தன் அரசியல் வாரிசாக, கருணாநிதி வளர்த்தெடுத்தார்.
இதனால், அண்ணன் அழகிரி, தங்கை கனிமொழிக்கு அரசியல் ஆசைகள் இருந்தும், கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., முழுதும் ஸ்டாலின் வசமானது.
கடந்த 2011 சட்டசபை, 2014 லோக்சபா, 2016 சட்டசபை என, தொடர்ந்து மூன்று பொது தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வுக்கு, ஸ்டாலின் தலைவரானதும் ஏற்றம் துவங்கியது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான தலைவர் இல்லாதது, ஸ்டாலினுக்கு சாதமாகியுள்ளது. அதனால், 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பின், அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.
அரை நுாற்றாண்டு காலம் தி.மு.க., தலைவராகவும், 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கு, அரசியல் என்பது போராட்டமாகவே இருந்தது. காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களை, அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த 1971-ல் காங்கிரஸ் பிளவுபட்டிருந்ததாலும், எம்.ஜி.ஆர்., உடன் இருந்ததாலும், தன் தலைமையில் சந்தித்த முதல் தேர்தலில் கருணாநிதி வென்றார். எம்.ஜி.ஆர்., மறையும் வரை, அவரால் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே முடியவில்லை.
பின், 1989-ல் அ.தி.மு.க., பிளவுபட்டதாலும், 1996-ல் மூப்பனார், ரஜினி ஆதரவுடனும் கருணாநிதி வென்றார். 2006-ல் தி.மு.க.,வுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. இப்படி சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் பெரும் கடும் சவாலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இப்போதைய அரசியல் சூழலில், வலுவான எதிர்க்கட்சி இல்லாததால், கூட்டணி அமைப்பதும், தேர்தல் வெற்றியும் ஸ்டாலினுக்கு எளிதாகியுள்ளது. உட்கட்சி பிரச்னைகளால் அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பதால், கூட்டணியில் இல்லாத பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளும், தி.மு.க., கூட்டணியில் இணைய விரும்புகின்றன.
கமலின் மக்கள் நீதி மய்யம், தி.மு.க., கூட்டணிக்குள் வந்து விட்டது. கருணாநிதிக்கு கூட அமையாத சாதகமான அரசியல் சூழல், ஸ்டாலினுக்கு அமைந்திருக்கிறது.
அதனால்தான், எதிர்ப்பை பற்றி கவலைப்படாமல், குறுகிய காலத்திலேயே மகன் உதயநிதியை, தி.மு.க., இளைஞரணி செயலர், எம்.எல்.ஏ., அமைச்சர் என, வேகமாக வளர்த்தெடுத்து வருகிறார்.
'கடந்த 2019 லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வென்றது. 'வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் அதுபோன்றதொரு வெற்றியை பெற வேண்டும்.
'மத்தியில் பா.ஜ.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், எம்.பி.,க்கள் பலத்தின் அடிப்படையில், துணைப் பிரதமர் பதவியை பெற வேண்டும் என்பதுதான், ஸ்டாலினின் கனவு' என்கின்றனர் தி.மு.க.,வினர்.
அதனால்தான், ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளான இன்று, சென்னையில் மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் என, தேசிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, தி.மு.க., ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 1996, 2004-ல் மத்திய அரசை உருவாக்குவதில், தி.மு.க.,வுக்கு முக்கிய பங்கு இருந்தது. அதுபோன்றதொரு அதிர்ஷடம், 2024-ல் வரும் என்று கனவுடன் காத்திருக்கிறார் ஸ்டாலின்.
70 வயதை நிறைவு செய்துள்ள அவரது கனவு நனவாகுமா அல்லது மீண்டும் தனி பெரும்பான்மையுடன் மோடியே பிரதமர் ஆவாரா என்பதை, 2024 தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.