காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புஞ்சையரசந்தாங்கலை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 40, இவரது மனைவி ராகிணி, 35. நேற்று காலை பார்த்தசாரதி வேலைக்கு சென்று இருந்தார். ராகிணி வீட்டில் இருந்தார். மதியம், 2:00 மணியளவில் ராகிணி வீட்டிற்கு வெளியே வர முயன்றார்.
அப்போது, நல்ல பாம்பு ஒன்று ராகிணியின் வீட்டிற்குள் புக முயன்றது. பாம்பை கண்டதும் பதறியடித்த ராகிணி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் வந்து பாம்பை விரட்ட முயன்றனர். படம் எடுத்து சீறிய பாம்பு, வீட்டு வராண்டாவில் இருந்த தண்ணீர் தொட்டி இடைவெளியில் சென்று பதுங்கி கொண்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சென்று, தண்ணீர் தொட்டி இடைவெளியில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.