சென்னை:சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் அதிகாலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வியாபாரிகள், பொதுமக்கள், வெளியூர் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் வளாகத்தை விட்டு வெளியேறும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் பேருந்துகளாலும், 'பீக் ஹவர்' வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றும், ஆசியாவில் பெரிய சந்தையாகவும், கோயம்பேடு சந்தை உள்ளது. சந்தை வளாகத்தில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு என, தனித்தனி பகுதிகள் பிரிக்கப்பட்டுஉள்ளன.
இங்கு, 4,000க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் இயங்குகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய வியாபாரிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் பணி புரிகின்றனர்.
கோயம்பேடு சந்தை, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும், அங்காடி நிர்வாக குழுவினர் பராமரித்து வருகின்றனர்.
2,500 லாரிகள்
நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் ஏற்றி தினமும் 2,500க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருகின்றன.
அதேபோல, சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்களில், வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில், திறந்தவெளி வியாபாரத்திற்கு இடம் வழங்கப்படவில்லை; அனுமதியும் இல்லை.
விதிமீறி திறந்தவெளியில் வியாபாரம் செய்வோரின் பொருட்களை பறிமுதல் செய்ய, அங்காடி நிர்வாக குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வியாபாரம்
கொரோனா தொற்று பரவலுக்கு முன் வரை, இதுபோன்ற ஆக்கிரமிப்பு வியாபாரத்தை, அங்காடி நிர்வாக குழுவினர் அனுமதிக்கவில்லை.
அவ்வப்போது ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கொரோனா தொற்று பரவலை குறைக்க சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது, காலியிடங்களில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போதும் இதுபோன்று வியாபாரம் நடக்கிறது.
வசூல் வேட்டை
இவை ஒருபுறம் இருக்க, சாலையோரங்களையும், நடைபாதைகளையும் ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளிடம், அங்காடி நிர்வாக குழுவினர் தினமும் அபராதம் என்ற பெயரில் பில் வழங்காமல், பணத்தை வசூலித்து 'பங்கிட்டு' கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இது, சி.எம்.டி.ஏ.,வில் உள்ள உயர் அதிகாரிகள் வரைக்கும் சென்று சேருவதாக, வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனால், உரிய நேரத்தில், காய்கறிகளை இறக்கி விற்பனை செய்ய முடியாததால், அவற்றின் தரம் பாதிக்கப்படுகிறது.
குறைந்த விலையில் காய்கறிகளை விற்க வேண்டிய நிலை ஏற்படுவதால் வியாபாரிகளுக்கு மட்டுமின்றி அவற்றை அனுப்பும் விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆனால், சந்தையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் சீர்கேடுகளை கண்டுகொள்ளாமல், அங்காடி நிர்வாக குழுவினர் அமைதி காத்து வருகின்றனர்.
அதேநேரத்தில், வியாபாரிகளிடம் வரி என்ற பெயரில் வசூலும், வாகன நுழைவு வசூலும் கோடிக்கணக்கான ரூபாய் நடக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கோயம்பேடு சந்தையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், வசூலில் மட்டும் அங்காடி நிர்வாக குழு குறியாக இருப்பது, வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:கோயம்பேடு சந்தையை திறந்தபோது, வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என, அரசு தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டது. சந்தையில் கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு தான் சொந்தம். பராமரிப்பு பணியை மட்டுமே அங்காடி நிர்வாக குழு செய்ய வேண்டும். ஆனால், முறையாக பணிகள் நடப்பதில்லை.
சந்தை முழுதும் அதிகாலை நெரிசல் ஏற்படுவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து முதன்மை நிர்வாக அலுவலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வாக்குறுதி அளித்தபடி, சந்தையை வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றி, விரைவில் அரசிற்கு அனுப்பஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, பாரிமுனை அடுத்த ஜார்ஜ் டவுன் பகுதியில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கான சந்தை இயங்கி வந்தது. அங்கு இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் வைத்து, சந்தையை கோயம்பேடிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 1996ம் ஆண்டு முதல் கோயம்பேடில் இயங்கி வருகிறது.