சென்னை:வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியரை, வாடகை வாகனங்கள் அழைத்துச் செல்லும் வகையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு முன்புறம்,'பிக் அப் பாயின்ட்' அமைத்து, புதிய சாலை மற்றும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில், 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம், 2022 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆறு அடுக்குகள் உடைய இந்த வளாகத்தில், 2,150 கார்கள் மற்றும் 400 இருசக்கர வாகனங்கள் வரை நிறுத்த முடியும்.
இது தவிர, பயணியரை ஏற்றிச் செல்ல, அடுக்கு மாடி வாகன நிறுத்தத்திற்கு பின்புறம், 'பிக் அப் பாயின்ட்' எனப்படும் பயணியரை அழைத்துச் செல்லும் இடம் அமைக்கப்பட்டது.
தற்போது, வாடகை வாகனங்களுக்கும், உள்நாட்டு முனையத்திற்கு முன்புறம் தனி 'பிக் அப் பாயின்ட்' அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியரை ஏற்றிச் செல்ல, அடுக்குமாடி வாகன நிறுத்தத்திற்கு பின்புறம், பிக் அப் பாயின்ட் உள்ளது.
இதில், வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படாமல், வாகன நிறுத்தத்திற்கு உள்ளே சென்று பயணியரை ஏற்றும் நிலை இருந்தது. தற்போது, வாடகை வாகனங்களுக்கென தனி பிக் அப் பாயின்ட், உள்நாட்டு முனையத்திற்கு முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப தார் சாலை மற்றும் பயணியர் நிற்கும் வகையில் நிழற்குடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவை, பயணியர் கார்களில் ஏறிச் செல்ல வசதியாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.