வேலுார்:வேலுார் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம், ஏழு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது.
இது குறித்து காட்பாடி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பல்வேறு நவீன வசதிகளுடன், 7.89 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இப்பணிகள் நேற்று தொடங்கி, 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள இரண்டு கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய நான்கு மாடியாக கட்டடம் கட்டப்படும்.
முதல் மாடியில் பயணிகள் வந்து செல்ல, இரண்டு புதிய நுழைவாயில், பால்கனியில் ஓய்வு அறை, உதவி மையம், 'ஏசி' பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு, பயண சீட்டு அறை, எஸ்கலேட்டர், மின் துாக்கி, பொருட்கள் வைக்கும் அறை கட்டப்படும்.
இரண்டாவது மாடியில் பெண்கள் காத்திருப்பு அறை, 'ஏசி' அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பாராமரிப்பு கட்டப்படும், 3, 4வது மாடியில் வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும்.
மற்றொரு பகுதியில் பால்கனி வசதியுடன், 4வது மாடியில் 10 ஆயிரத்து, 250 சதுர அடியில் அமைக்கப்படும். இங்கு பயணிகள் உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைக்கும் முறை, ரயில்வே அலுவலகம் அமைக்கப்படும்.
ஆறு மாடியுடன், 9,250 சதுர அடியில், ஆறு மாடி கார், பைக் பார்க்கிங் அமைக்கப்படும். இங்கு, 258 கார், 2,210 பைக்குகள் நிறுத்தலாம்.
இங்கு வர, அகலமாக பாதை அமைக்கப்படும். இது போன்ற, நவீன வசதிகளுடன் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.