மதுரை:துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் பாரதியார் படித்த பள்ளியின் நிலம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதை மீட்க நடவடிக்கை கோரிய வழக்கில், அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
எட்டையபுரத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்த தாவது:
எட்டையபுரத்தில் அரசு உதவி பெறும், ராஜா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் படித்தார். இப்பள்ளியால் 40 கிராம மாணவர்கள் பயன்அடைகின்றனர்.
சட்டவிரோதம்
பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக 5.03 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு 1966ல் வழங்கியது. இது, தற்போது உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுஉள்ளது.
ஒத்திவைப்பு
அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்; சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளி நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று, பள்ளிக் கல்வித்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், துாத்துக்குடி கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.