சென்னை:'புகார்கள் அதிகரித்துஉள்ளதால், ஓட்டுனர், நடத்துனர்கள் கவனத்துடனும், கணிவுடனும் பணியாற்ற வேண்டும்' என, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் குறித்த புகார்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் அதிகம் வெளிவருகின்றன.
இதை தடுக்கும் வகையிலும், பயணியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ஓட்டுனர், நடத்துனர்கள் நடந்து கொள்ளுமாறு, மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், பணிக்கு வரும்போது, இதுகுறித்த விதிமுறைகளை படித்துப் பார்த்து, பணி வழங்குவோரிடம் கையெழுத்திட்டு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு பஸ் நேரக் காப்பாளர்கள் கூறியதாவது:
மகளிர் இலவசப் பயணம், அரசுக்கு நல்ல பெயரைத் தந்துள்ளது. ஆனால், பெண்களை மதிக்காமல் வசைபாடும் நடத்துனர்களாலும்; பஸ்சை நிறுத்தாத ஓட்டுனர் களாலும் பிரச்னைகள் வருகின்றன.
அதேபோல், படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில், பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி பெண் பயணியர், முதியோர், மாற்றுத் திறனாளிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பயணிர் ஏறி, இறங்கியதை உறுதிப்படுத்திய பின், விசில் ஊத வேண்டும்.
படிக்கட்டுகளில் பயணியர் தொங்காத வகையில், பஸ்சுக்குள் இடவசதி ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள நிறுத்தங்களில், கட்டாயம் பஸ்சை நிறுத்த வேண்டும். மாணவர்களை ஏற்றிய பின், வாசல் கதவுகளை மூட வேண்டும்.
பணி நேரத்தில் கவனச் சிதறலுக்கு காரணமாக, நடத்துனரையோ பயணியரையோ அருகில் அமர்த்தி, ஓட்டுனர்கள் பேசக் கூடாது என, பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.