ராமேஸ்வரம்:தமிழக மீவர்களின் 8 படகுகளை அரசுடைமையாக்கியும், 4 படகுகளை விடுவித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து யாழ்ப்பாணம் அருகே காரை நகர் கடற்கரையில் நிறுத்தினர்.
இப்படகின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராக இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் பலமுறை வாய்தா தேதி அறிவித்தது. இந்நிலையில், ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் 4 விசைப்படகுகளை நீதிமன்றம் நேற்று விடுவித்தது.
இப்படகுகளை பராமரித்த வகையில் அதற்கான செலவு ரூ. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை படகு உரிமையாளர்கள் மார்ச் 14ல் செலுத்த வேண்டும். தவறினால் இப்படகுகளும் அரசுடமையாக்கப்படும் என உத்தரவிட்டது.
மேலும் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், நாகையை சேர்ந்த 8 படகுகளின் உரிமையாளர்கள் ஆஜராகாத நிலையில் இப்படகுகளை அரசுடைமையாக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.