கோவையில் பல ஆண்டு களுக்குப் பின் களப்பணி செய்யும் கலெக்டர் கிடைத்திருப்பது, அதிகாரிகள் மற்றும் மக்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோவை, அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு, இங்குள்ள பல்வேறு விஷயங்களும் தடைக்கல்லாக உள்ளன.
சர்வதேச நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படாததும், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து திட்டம் இல்லாததும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை இங்கே கால் பதிக்க விடாமல் தடுத்து வருகின்றன.
விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை, எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம் போன்ற திட்டங்கள், ஆண்டுக்கணக்கில் தாமதமாகி வருகின்றன. இவற்றில் பல திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியும், தாமதமாகி வருவதற்கு இங்குள்ள அரசியல்வாதிகளை விட, அதிகாரிகளே காரணம்.
தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்
துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமலிருப்பது, மற்றொரு முக்கிய காரணம். வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக, அடிக்கடி ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, பணிகளின் நிலையை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு, கலெக்டருக்கே உள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, கோவைக்கு கலெக்டராக வந்த பல அதிகாரிகளும், இந்தப் பணியை சரிவரச் செய்யவில்லை.
அதேபோன்று, பட்டா பெயர் மாறுதலில் அதிகரித்துள்ள லஞ்சம், முறைகேடுகள், அரசு நிலம் ஆக்கிரமிப்பு, விவசாயிகள் பிரச்னைகள் என நீண்ட காலமாக தீர்வு காணப்படாத பல பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கலெக்டருடையதே.
இவ்விரு பணிகளையும் சிறப்பாகச் செய்ய வேண்டுமெனில், களப்பணியை சரியாகச் செய்வதோடு, துறைரீதியான அறிவும் ஈடுபாடும் அதிகம் தேவையாகிறது.
நிறைவேறியது எதிர்பார்ப்பு
முக்கிய நகரான கோவைக்கு, சிறப்பாகச் செயல்படும் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டுமென்பது, இங்குள்ள தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது.
அதை நிறைவேற்றும் வகையில், தற்போதுள்ள கலெக்டரின் செயல்பாடுகள் அமைந்திருப்பது, வளர்ச்சியை விரும்பும் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் கிராந்திகுமார், பணியில் சேர்ந்த ஒரு மாதத்துக்குள், கோவையில் ஒவ்வொரு திட்டத்துக்கும் உள்ள முட்டுக்கட்டைகளையும், பல்வேறு பிரச்னைகளுக்குமான காரணிகளையும் அறிந்து, அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
உதாரணமாக, மேட்டுப்பாளையம் ரோட்டில் இரண்டு பாலங்கள் கட்டுமானப் பணியும் தாமதமாகி வருவது குறித்து அறிந்த அவர், மாற்று ரோடுகளில் உள்ள பிரச்னைகள், சர்வீஸ் ரோடு அமைப்பது தொடர்பான புகார்களைக் கேட்டறிந்துள்ளார்.
புகார்தாரர்களுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரையும் அழைத்துப் பேசி, அதற்கான தீர்வுகளை முன்னெடுத்துள்ளார்.
புது ரேஷன் கார்டு விநியோகத்தில் ஏற்படும் தாமதத்துக்கான காரணத்தை அறிந்து, அதைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விமான நிலைய விரிவாக்கத்தில், இழப்பீடு வாங்கியவர்களில் பலர், குழந்தைகளின் தேர்வு காரணமாக, காலி செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறிந்து, அவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பைத் துண்டிக்காமலிருக்க, மனிதாபிமான அடிப்படையில் உதவியுள்ளார். குறை கேட்பு கூட்டத்தில் தன் அணுகுமுறையால் விவசாயிகளிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
எதையுமே தள்ளிப்போடாமல் அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு, தொழில் முனைவோர், விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரின் நம்பிக்கையையும் பெற்று சிறப்பாகப் பணியாற்றும் கலெக்டர், இங்குள்ள அரசியல் அழுத்தத்தை தாங்குவாரா என்பதுதான், விடை தெரியாத கேள்வி.
-நமது நிருபர்-