வெள்ளலூர், : வெள்ளலூர், எல்.ஜி.நகர் பேஸ் 1 பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டிற்கு செல்லும் வழி, குளத்தின் வாய்க்கால் ஆகும். இதன் மேற்பகுதி மூடப்பட்டு, வண்டிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.
இதனையொட்டி, வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலத்திற்கு (அ.தி.மு.க.,) சொந்தமான தோப்பு உள்ளது. இதன் ஒரு பகுதியில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து எரிக்கப்படுகிறது.
இதனால் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு, செந்தில்குமார் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் செய்தார்.
நடவடிக்கை இல்லாததால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் செய்தார்.
ஆய்வு செய்த அதிகாரிகள், இரு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்து, அறிவுறுத்தி சென்றனர்.இதனால் கோபம் அடைந்த மருதாசலம், செந்தில்குமார் வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தில், தனது வீட்டின் கழிவுநீர் செல்லும் குழாயை துண்டித்துள்ளார். மேலும், அருகேயுள்ள தனது உறவினரின் தோட்டத்தில் செந்தில்குமாரின் வீட்டை ஒட்டி, குழி தோண்டி கழிவுநீரை தேங்க செய்துள்ளார்.
இது குறித்து, செந்தில்குமார் நேற்று போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
பேரூராட்சி தலைவர் மருதாசலத்திடம் கேட்ட போது, புகார்தாரரின் வீட்டிற்கு செல்ல வழி கிடையாது. கழிவுநீர் குழாய்களை அவர்கள்தான் சேதப்படுத்தியுள்ளனர். வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.
மின் இணைப்பே எனது தோப்பில் விவசாயத்திற்காக போடப்பட்ட மின் கம்பத்திலிருந்துதான் செல்கிறது. மனிதாபிமான அடிப்படையில் இதனை செய்துள்ளேன். இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.