கோவை, : கோவை பட்டுக்கூடு அங்காடியில் கடந்த ஒரு மாதத்தில், 25-30 டன் பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவை, பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு விற்பனை அங்காடிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பட்டுக்கூடுகளின் தரத்திற்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் போட்டி, போட்டுக்கொண்டு தினமும் ஏலம் முறையில் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், பட்டுக்கூடு விற்பனை மையத்திற்கு ஆயிரம் கிலோவுக்கு மேல் பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
குறைந்தபட்ச விலையாக, ரூ.487 ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்ட பட்டுக்கூடுகளுக்கு, ரூ.653 வரை கிடைத்துள்ளது. அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.700 வரை கிடைத்ததால், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் கூறுகையில், ''கோவை பட்டுக்கூடு அங்காடியில், தினமும் ஏலம் முறையில் பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்படும். 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை, 2 லட்சத்து 2ஆயிரத்து 190 கிலோ பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அரசுக்கு ரூ.17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில், 25-30 டன் பட்டு கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது; அரசிற்கு ரூ. 3 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
நாளுக்கு நாள் பட்டுக்கூடு விலை அதிகரித்து வருவதால், விவசாயிகள் பட்டுக்கூடு தொழிலை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்,'' என்றார்.