மேட்டுப்பாளையம், : ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம், அகத்தியர் நகருக்கு, ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர் மற்றும் மலைவாழ் மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே ஓடந்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாறு ரயில்வே ஸ்டேஷன் அருகே, சமத்துவபுரத்தில், 120 வீடுகளும், அகத்தியர் நகரில், 50 வீடுகளும் என மொத்தம், 170 வீடுகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கு மலைவாழ் மக்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த இரு குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வர வழித்தடம் இல்லை. இவர்கள் ரயில் பாதையை கடந்து சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. உடல் நலம் பாதித்தவர்களை தொட்டில் கட்டி, மருத்துவமனைக்கு ரயில் பாதையை கடந்து வருகின்றனர். இறந்தவர்களை அதே போன்று, ரயில் பாதை வழியாக தூக்கி வருகின்றனர். ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் குடிநீர், மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு வீதிகளுக்கும் கான்கிரீட் சாலை போட்டுள்ளது.
ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல, சாலை வசதி இல்லாததால், அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, ரயில் பாதையின் மறுபக்கம் நிறுத்தி செல்கின்றனர். அதனால் ரயில் பாதையில் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்கும்படி, மலைவாழ் மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மலைவாழ் மக்கள் கூறினர்.
இதுகுறித்து ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் கூறியதாவது:
ரயில் பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க கோரி, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மேட்டுப்பாளையம் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மலைவாழ் மக்களும், ரயில் பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேலாளர் ஆவண செய்வதாக கூறியுள்ளார். விரைவில் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால், இரு குடியிருப்பு பகுதி மக்களுக்கு, மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
இவ்வாறு ஊராட்சித் தலைவர் கூறினார்.