திருப்பூர், : பின்னலாடை தொழில் மேம்பட, 'டப்' திட்டத்தை, 2022 ஏப்., 1ம் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் சர்தோஷிடம், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும், கோரிக்கையை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வைத்தது.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், திருப்பூரில் மட்டும், ஆண்டுக்கு, 33 ஆயிரத்து 525 கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம், 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது.
இந்தியாவின், பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது; தற்போது, 55.32 சதவீதமாக இருக்கிறது.
'டப்' திட்டம் நீட்டிப்பு
சிறு, குறு நிறுவனங்கள், தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புது வரவு மெஷின்களை பயன்படுத்தவும், 'டப்' திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட'டப்' திட்டம், 2022 மார்ச் 31 தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, மீண்டும் 'டப்' திட்டத்தை, 2022 ஏப்., 1ம் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டும்.
'பேக்கிங் கிரெடிட்' சலுகை
பல்வேறு காரணங்களால், பனியன் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொருளாதார சிக்கலை தீர்க்க ஏதுவாக, 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி சலுகை, 3 மற்றும் 2 சதவீதம் என்பதை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஏற்றுமதி மறுநிதியளிப்பு
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 'ரெப்போ ரேட்' உயரும் போது, கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் இருந்தது போல், ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி, வட்டி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, ஆவன செய்ய வேண்டும்.
அவசரகால கடன்
கொரோனா காலத்தில், பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையில், நிலுவை கடன் மதிப்பில், 20 சதவீதம், பிணையமில்லா கடனாக வழங்கப்பட்டது. நுால்விலை உயர்வு, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், தற்போதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில், நிலுவை கடன் மதிப்பில், 30 சதவீதம் வரை கடன் வழங்க வேண்டும்.
உள்கட்டமைப்பு மேம்பாடு
அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், திருப்பூர் நகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில், மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். திருப்பூரின் ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பில், 1 சதவீத தொகையை, திருப்பூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவருடன், செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர், பனியன் தொழில் சார்ந்த கோரிக்கையை அமைச்சரிடம் விளக்கினர்.