இடைப்பாடி : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், கொங்கணாபுரம் வந்த, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கோரணம்பட்டி ஊராட்சி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., விவகாரத்தில், 2022 ஜூலை, 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தீர்ப்புக்கு பின், இடைப்பாடி சட்டசபை தொகுதிக்கு நேற்று, பழனிசாமி வந்தார். அவருக்கு, கொங்கணாபுரம் ஒன்றியம், கோரணம்பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து பட்டாசு வெடித்து வரவேற்றனர். அவருடன் கொங்கணாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரத்தினம், பொன்மாதேஷ், கோரணம்பட்டி ஊராட்சி மணி, தையல் பயிற்சி நிலைய பெண்கள், ஊராட்சியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள், பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று பங்கேற்றார். பின் குடும்பத்தினருடன்
தரிசனம் செய்தார். இதையடுத்து இடைப்பாடி பயணியர் விடுதிக்கு வந்த அவர், நகர கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.