வில்லியனுார்: ஏம்பலம் அருகே கோவில் எதிரே வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
ஏம்பலம் அருகே கம்பளிகாரன்குப்பம் காலனியில் அம்பேத்கர் சிலை வைப்பதில் இரு அமைப்புகளிடையே போட்டி இருந்தது.
இந்நிலையில் ஒரு தரப்பினர் எவ்வித அனுமதியின்றி இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் இடத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்தனர்.
இதனை கண்டித்தும், சிலையை அகற்ற வேண்டி மற்றொரு தரப்பினர் இந்து அறநிலையத் துறைக்கு மனு கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை இல்லை.
அதனைத் தொடர்ந்து மனு கொடுத்த தரப்பினர், தற்போதுள்ள அம்பேத்கர் சிலைக்கு எதிரே புத்தர், அம்பேத்கர், பெரியார் சிலை அமைக்க பீடம் கட்ட செங்கல் இறக்கினர். இதனால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியது.
அதனைத் தொடர்ந்து, கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி இந்து சமய அறநிலைய ஆணையர், தாசில்தார் மற்றும் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பாகூர் தாசில்தார் மற்றும் போலீசார் நேற்று மாலை கம்பளிக்காரன்குப்பம் காலனியில் கோவில் எதிரே வைத்திருந்த அம்பேத்கர் சிலையை அகற்றி, தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் சிலை பீடம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால், கம்பளிக்காரன் குப்பத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.