நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, 147 மையங்களில் துவங்கியது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும், 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, மாநிலம் முழுதும் நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 1ல், 17 ஆயிரத்து, 810 பேர், பிளஸ் 2ல், 19 ஆயிரத்து, 877 பேர் என, மொத்தம், 37 ஆயிரத்து, 687 மாணவ, மாணவியர், அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், நேற்று துவங்கிய செய்முறை தேர்வு, வரும் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, 147 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு, அக தேர்வு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.