புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு நாள் கலெக்டராக இருந்த அரசு பள்ளி மாணவி, சட்டசபை உள்பட பல்வேறு அரசு துறைகளை ஆய்வு செய்தார்.
'முதல்வன்' சினிமா பாணியில் ஒருநாள் கலெக்டராக வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் எனப் பலருக்கும் பல எண்ணங்கள் தோன்றும். அப்படி ஒரு வாய்ப்பு, புதுச்சேரியில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யாவிற்கு நேற்று கிடைத்தது.
காலை 9 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தவுடன் அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து கலெக்டர் மணிகண்டன் வரவேற்றார். அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் தினமும் அலுவலகத்திற்கு வரும் கோப்புகள், மனுக்களை கையாளும் முறை, பொது மக்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை விளக்கி கூறினார்.
தொடர்ந்து நேற்று முழுவதும், மாணவி ஐஸ்வர்யா, கலெக்டருடன் பயணித்து அவரது பணிகளை கவனித்தார். உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினார். ஸ்மார்ட் சிட்டி கூட்டத்திலும் பங்கேற்றார். சட்டசபைக்கும் சென்றார். அங்கு சட்டசபை நடைமுறைகளை சபாநாயகர் செல்வம் விளக்கி கூறி, மாணவியை வாழ்த்தினார்.
ஒரு நாள் கலெக்டராக இருந்த மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், கலெக்டர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் தான் என நினைத்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் கலெக்டர் என்பது வெறும் வேலை மட்டும் அல்ல. நிறைய மக்கள் பணி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
மக்களிடம் எவ்வாறு கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது கனவாக கொண்டுள்ள எனக்கு, இன்றைய நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பள்ளி மாணவி ஒரு நாள் கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு அளித்த கலெக்டர் கலெக்டர் மணிகண்டனுக்கு பொது மக்கள், நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.