வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான கட்டணம், ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கோவிலில் அன்றாடம், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கட்டண தரிசனம், சாதாரண நாட்களில் நபருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கால பூஜைக்கு, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது சாதாரண கட்டணம், 10 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக, ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னறிவிப்பு ஏதும் வழங்காமலும், முறையான ஆணை இல்லாமலும், திடீரென கட்டண உயர்வு அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்கள், பக்தர்கள் என, பலரும் வேதனைப்படுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு வசூல் செய்கின்றனர். இந்த அரசு, கோவிலின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை பக்தர்களிடம் உள்ளது. ஆனால், அறநிலையத்துறை அதற்கு முயற்சி செய்யவில்லை. பக்தர்களிடம் கட்டணம் என்ற பேரில், கொள்ளையடிப்பதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.