தேசிய அறிவியல் தின விழா
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, கூட்டுர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர் தயார் செய்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ஆனந்தகுமார் செய்திருந்தார்.
போலீசை வசைபாடியவர் கைது
பாலக்கோடு: மகேந்திரமங்கலம் எஸ்.எஸ்.ஐ., ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார், மாரண்டஹள்ளியில் கடந்த, 27ல் இரவு நடந்த அங்காளம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் இருந்த தாசனேரியை சேர்ந்த ஆனந்தன், 29, என்பவர், அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ., ரஜினிகாந்த் புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார், ஆனந்தனை கைது செய்தனர்.
பீன்ஸ் விலை உயர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து உழவர்சந்தைகளில், தற்போது பீன்ஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ பீன்ஸ், 36 ரூபாய்க்கு விற்றது. பின், நேற்று முன்தினம், 48 எனவும், நேற்று, 50 ரூபாய் எனவும் விலை அதிகரித்து விற்பனையானது. இதனால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனியில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கின்றனர். இந்த மையத்திற்கு, ஜே.சி.ஐ., என்ற அமைப்பு சார்பில், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று வழங்கப்பட்டது. ஜே.சி.ஐ., நிர்வாகிகள் ராஜேஷ் சுப்பிரமணி, தென்றல், கிருஷ்ணன், சுதர்சனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளூவர் சிலை திறப்பு விழாவையொட்டி, மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணயவியருக்கு சமூக ஆர்வலர்கள் தென்னரசு, பத்மா மாரியப்பன், ஆசிரியர் சிங்காரவேலு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இரு குழந்தைகளின் தாய் மாயம்
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அடுத்த கடமனுாரை சேர்ந்தவர் பவித்ரா, 31; இவரது கணவர் கடமடையை சேர்ந்த பெருமாள். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். பவித்ரா, அத்திமுட்லுவை சேர்ந்த சுந்தர் என்பவருடைன் பேசியது தொடர்பாக, கடந்த, ஐந்தாண்டுகளுக்கு முன், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவித்ரா தன் தந்தை வீட்டில் வசித்தபடி, தர்மபுரியிலுள்ள ஒரு தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 24ல் மாலை, 4:30 மணிக்கு ஓசூர் செல்வதாக வீட்டில் கூறிச்சென்ற பவித்ரா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தம்பி ஆனந்தன் புகார்படி, மாரண்டஹள்ளி போலீசார், பவித்ராவை தேடிவருகின்றனர்.
மாயமான காரை தேடும் போலீஸ்
தொப்பூர்: திருவாரூர் மாவட்டம், சிறுபட்டாகரையை சேர்ந்தவர் ஆரோக்கியரூபன், 24, டிரைவர்; இவரது இன்னவோ காரில் கடந்த, 26ல் அவரது நண்பர் ஆகாஷ் பெங்களூரு சென்றுள்ளார். காரை ஆரோக்கியரூபனின் மைத்துனர் மதன்ராஜ், 25, ஓட்டினார். மாற்று டிரைவராக சூர்யா, 27, உடன் சென்றுள்ளார். இவர்கள், ஆகாஷை பெங்களூருவில் விட்டு விட்டு, தர்மபுரி மாவட்டம், வழியாக ஊர் திரும்பினர். பாளையம்புதுார் அருகே கடந்த, 27ல் இரவு, 7:30 மணிக்கு காரை நிறுத்தி விட்டு, ஓட்டலில் சாப்பிட சென்றபோது, கார் மாயமானது. ஆரோக்கியரூபன் நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்ற இருவர் சிக்கினர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., கிரிகோரி பொன்னுசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பழையபேட்டை மாரியம்மன் கோவில் தெரு, ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிகளில் தடை செய்த லாட்டரி விற்ற பிரகாஷ், 24, கோவிந்தராஜ், 47, ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து, 1,910 ரூபாயை பறிமுதல் செய்தனர்.