பொள்ளாச்சி, : பொள்ளாச்சி கோட்டத்தில், 86,948 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கு, கோமாரி நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பசு மற்றும் எருமை இனங்களை அதிகம் பாதிப்படைய செய்கிறது. நோய் பாதித்த கால்நடைகள், வாய் மற்றும் கால்குளம்புகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு, உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்படும்.
அதேபோல, நோய் பாதித்து குணமடைந்த கால்நடைகளில் பால் உற்பத்தி குறைவதுடன் சினைபிடிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் இருந்து மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
இதனால், கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில், கால்நடைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம் வாயிலாக, பொள்ளாச்சி கோட்டத்தில், 86,948 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
பொள்ளாச்சி கோட்டத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ள, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குழுவுக்கும், தினமும், 150 'டோஸ்' வரை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி கால்நடை மருந்தகம், பால் சேகரிப்பு நிலையங்கள், ஊராட்சி வாயிலாக கால்நடை வளர்ப்போருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வரும், 21ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த வாய்ப்பை கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.