மதுரை-மதுரை மாநகராட்சி 38வது வார்டில் கலங்கலான குடிநீர் வருவதால் தினமும்
மதுரை மாநகராட்சி வார்டு 38ல் பொதுமக்கள்அடிப்படை பிரச்னைகளால் தினந்தோறும் திணறுகின்றனர். இந்த வார்டில் சதாசிவம் நகர், லட்சுமி நகர், சவுராஸ்டிராபுரம், பாரதிதாசன் தெரு போன்ற தெருக்களில் பல ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.
இத்தெருக்களில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள், துாய்மையற்ற குடிநீர், வண்டிகள் பதியும்ரோடுகள் என அவலம் நீண்ட காலமாக தொடர்வதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
நாறுது போர் தண்ணீர்
மோகன் ராம், லட்சுமி நகர்: இப்பகுதியில் ஆறுமாதங்களாக சாக்கடை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இந்தக்கழிவுநீர், ஆழ்துளை கிணற்று நீருடன் கலந்து கலங்கலாக, துர்நாற்றத்துடன் வருகிறது.
இதனை வீட்டுத் தேவைகளுக்கு உபயோகப்படுத்த முடியாமல், டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. கண்ட தண்ணீரையும் பயன்படுத்துவதால் நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள்இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். குடிமகன்கள் மது அருந்திவிட்டு தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வதால் ரோட்டில் நடமாட முடியவில்லை.
குண்டுகுழி ரோடுகளால் அவதி
-முத்துபாண்டி, பாரி தெரு: குடிநீர், சாக்கடை பணிக்காக ரோடுகள் தோண்டப்பட்டதால் அவை குண்டும்குழியுமாக உள்ளன. இதனால் தெருவை கடந்து செல்ல வாகன ஓட்டிகளுக்கு சவாலாக உள்ளது. பணிகளை விரைவாக முடித்து, ரோடு அமைத்து கொடுத்தால் மக்கள் சிரமம் இன்றி சென்று வர முடியும்.
பணிகள் விரைவுபடுத்தப்படும்
கவுன்சிலர் கதிரவன் தி.மு.க.,: லட்சுமி நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தவுடன் நிரந்தர தீர்வு கிடைத்துவிடும். கலங்கலாக வரும் குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகராட்சி பணிகள் முடிந்தவுடன் ரோடுகள் அமைக்கும் வேலை தொடங்கும்.
அனுமார்பட்டியில் ரேஷன் கடைகள், சிறிய பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கிவிடும். முடிந்தளவு குடிநீர், சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி ஓராண்டுக்குள் மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.