விஜயநகரா-உலக பிரசித்தி பெற்ற ஹம்பியின், 14வது நுாற்றாண்டின் மண்டபம் மீதேறி நடனமாடிய இளைஞரை, போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
விஜயநகரா, ஹொஸ்பேட்டின், ஹம்பி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
வெளிநாட்டு பயணியர், புராதண மண்டபங்களில் அமர்ந்து, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி, சர்ச்சைக்கு காரணமானது. ஹம்பியின் புனிதத்தை களங்கப்படுத்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு கடிவாளம் போடும்படி, வரலாற்று வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இளைஞர் ஒருவர், ஹம்பியின் ஹேமகூட மலையில் ஏறி செல்வது, 14ம் நுாற்றாண்டின் புராதண மண்டபத்தின் மீதேறி நடனமாடும் வீடியோ, சமீபத்தில் பரவியது. இதை பலரும் கண்டித்தனர்.
ஹம்பி போலீசார், வழக்கு பதிவு செய்து இளைஞரை தேட துவங்கினர். இவர் மாண்டியாவை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹம்பியின் மூத்த கைடு பிரபு பாட்டீல் கூறியதாவது:
இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது, வரவேற்கத்தக்கது. ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியர், இங்குள்ள கலாசாரம், புனிதத்தை, விதிமுறைகளை மதிக்க வேண்டியது அவசியம்.
திரைப்பட படப்பிடிப்பு, 'டாக்குமென்டரி' படப்பிடிப்பு நடத்த இந்திய தொல்பொருள் ஆய்வகம் அனுமதி அளிக்கிறது.இதற்காக கட்டணமும் வசூலிக்கிறது. நினைவு மண்டபங்கள் சேதமடையாமல், படப்பிடிப்பு நடக்கிறதா என்பதை மேற்பார்வையிட, குழுவை அமைக்கிறது.
ஹம்பியில் 2,500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பாறைக்கற்கள், கோவில்கள், கல்வெட்டுகள் உள்ளன. அனைத்து இடங்களுக்கும், பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க முடியாது. இதை பயன்படுத்தி இளைஞர், விதிமுறையை மீறி 'வீடியோ' எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.