ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் முதுகலை வரலாறு படிக்கும் கல்லுாரி மாணவியருக்கு ஒரு வார காலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு, ஈரோடு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள், கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், சோழர் கால நாணயங்கள், கை பீரங்கி, பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்திய பொருட்கள் போன்ற விலை மதிப்பில்லாத பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் முதுகலை வரலாறு படிக்கும், 2ம் ஆண்டு மாணவியருக்கு ஒரு வார பயிற்சி கூட்டம் கடந்த மாதம், 22ல் துவங்கியது. இப்பயிற்சியில் அருங்காட்சியகங்களின் வகைகள் குறித்தும், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், தோற்பாவைகள், நாணயங்கள், மரசிற்பங்கள், ஓவியங்கள், விலங்கியல் பொருட்களை இயற்கை முறையிலும், வேதியியல் முறையிலும் எப்படி பாதுகாப்பது, பதப்படுத்துவது தொடர்பான பயிற்சிகளை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி எடுத்துக்கூறினார். இந்த பயிற்சி, நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.