விஜயபுநகரா-வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருமாறு ஒரு பெண், போலீசில் புகார் அளித்தார்.
விஜயநகராஹொஸ்பேட் எம்.ஜே. நகர் 4வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 35. இவர் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்களை இவர் தினமும் காலையில் அரை மணி நேரம் வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க விடுவது வழக்கம்.
அதுபோல கடந்த மாதம் 22ம் தேதி இரண்டு நாய்களையும் வெளியில் விட்டிருந்தார். நீண்ட நேரமாகியும் நாய்கள் திரும்பி வரவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஹொஸ்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், 'நாயை நன்றாக தேடிப் பாருங்கள்' என கூறி அனுப்பி விட்டனர்.
பின், மீண்டும் கடந்த 26ம் தேதி புகார் அளித்தபோது போலீசார் ஏற்றுக் கொண்டனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதி கவுன்சிலர் மஞ்சுநாத்திடம் நாய்கள் காணாமல் போனது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நாய்கள் இரண்டும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக நகராட்சி ஊழியர்களால் பிடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து, நகராட்சி அதிகாரிகளின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, நாய்களின் உரிமையாளரும், அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அது தெரியாமல் ஊழியர்கள் பிடித்து சென்று மீண்டும் ஒரு முறை கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு உரிமையாளர் ஸ்ரீதேவி கண்டனம் தெரிவித்துள்ளார். 'நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.