கொட்டையூர்:கடம்பத்துார் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சியில் காரணை கிராமத்தில் புல எண்.88ல் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது காரணை ஏரி.
இந்த ஏரியை நம்பி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 70 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரி எவ்வித பராமரிப்பும் இல்லாததால், 10 ஆண்டுகளாக மதகு சேதமடைந்துள்ளது.
இந்த ஏரியில் சேதமடைந்த மதகால், ஏரி அருகே உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரி, 2022ம் ஆண்டு, ஜூலை மாதம், நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக 'டெண்டர்' விடப்பட்டு மணல் அள்ளப்பட்டது.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, காரணை ஏரி மதகுகளை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.