கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சுரேஷ் நகர், ராஜா கணபதி தெரு செல்லும் வழியில், காலி மனையில் பல மாதங்களாக குப்பை தேங்கியுள்ளது.
மேலும், அங்கு கழிவு நீர் கால்வாய் உள்ளது. குப்பை தேக்கம் அடைந்து, கழிவு நீர் கால்வாய் சீராக செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.
இதில், கால்நடைகள் மற்றும் பன்றிகள் குப்பையை கிளறி, சாலையில் திடீரென்று ஓடுவதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சி, இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட சுரேஷ் நகர், ராஜா கணபதி தெரு, மசூதி மூன்றாவது குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில், அதிக மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கே, ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்க, ஊழியர்கள் வருவதில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அருகில் உள்ள காலி மனையில் குப்பை கொட்டுகின்றனர். அதனால், குப்பை தேக்கம் அடைந்து, கால்நடைகள் மற்றும் பன்றிகள் குப்பையை கிளறுகின்றன.
மேலும், கொசுத் தொல்லை, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், குப்பையை முறையாக அகற்றவும், சுகாதார ஊழியர்கள் தினமும் குப்பை சேகரிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.