கடலுார்: தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ரிஜேஷ் குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் நேரு யுவ கேந்திரா சார்பில் கடலுார் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டர் பணியில் சேர இளைஞர்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2023 ஏப்., 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவராகவும், 29 வயதுக்குட்பட்டவராகவும் உள்ள கடலுார் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம். பணியில் சேர விரும்புவோர், தங்களின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, வயது, பிறப்பு, இனம் ஆகிய விபரங்களுடன் வரும் 9ம் தேதிக்குள் நேரு யுவ கேந்திரா அலுவலகம், சக்கரை கிராமணி தெரு, புதுப்பாளையம், கடலுார் என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது www.nyks.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேசிய மாணவர் படை (நாட்டு நலப்பணித் திட்டம், பாரத சாரண, சாரணியர்), இளைஞர் மன்றம் மற்றும் மகளிர் மன்ற அமைப்புகளில் பங்கு பெற்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு.