திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், சிறுகுன்றம் ஊராட்சி யில் அடங்கிய மருதேரி கிராமத்தில், 200 குடும்பங்கள் உள்ளன. இங்கு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.
இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதன் மூலம், 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் கிணறு தோண்டப்பட்டு, குடிநீர் வினியோகமும் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதி அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், வாசனை திரவியம், காலாவதியான பொருட்கள், ஆயில் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
பல்வேறு வகையான குப்பைக் கழிவுகளை மர்ம நபர்கள் வாகனம் மூலம் ஏற்றி வந்து, ஏரியின் உள்பகுதி, தாங்கல் பகுதிகளில் கொட்டுகின்றனர்.
மேலும், கொட்டிய ரசாயன குப்பைக்கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். கொட்டப்படும் குப்பைக் கழிவுகள், ஏரி மற்றும் ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றை மாசடைய செய்கின்றன.
மேலும், குப்பை கழிவுகளை எரிக்கும்போது, அதிக அளவு புகை ஏற்பட்டு, அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், இருமல், தோல் நோய், குழந்தைகளுக்கு தொற்று நோயை உண்டாக்குகின்றன.
இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறைக்கு புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், ஏரிப்பகுதியை ஆய்வு செய்தனர். குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
எனினும், இனிமேல், தொழிற்சாலை ரசாயன குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கொட்டிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.