உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுதாமூர், மதுார், சித்தாலப்பாக்கம், சிறுமயிலுார், பினாயூர், குண்ணவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த ஆண்டுகளில், அரசு அனுமதி பெற்ற தனியார் கல் குவாரிகள் இயங்கின.
கல் குவாரிக்கான அனுமதி காலம் நிறைவு பெற்றதையடுத்து, அவை கைவிடப்பட்ட கல் குவாரிகளாக, தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளன.
காலாவதியாகி கைவிடப்பட்ட இந்த குவாரிகள், 100 அடி ஆழத்திற்கும் மேல் பள்ளம் கொண்டதாக உள்ளன. இப்பள்ளங்களை சுற்றி எவ்வித தடுப்புகளும், வேலிகளும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளன.
இதனால், மலை மற்றும் மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பயன்பாடற்ற கல் குவாரி அருகே செல்லும் போது, மண் சரிந்து மற்றும் குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து ஆபத்திற்குள்ளாவதாக, கால்நடை பராமரிப்போர் கவலையடைந்து வருகின்றனர்.
இது குறித்து, சிறுமயிலுார் கிராமவாசிகள் கூறியதாவது:
சிறுமயிலுார், மதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஆடு, மாடுகள் அதிக அளவில் வளர்த்து வருகிறோம்.
கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாக உள்ள இப்பகுதிகளில், கடந்த ஆண்டுகளில், மலை மற்றும் குன்று பகுதிகளையொட்டி உள்ள விவசாயம் செய்த நிலங்களையும், தரிசு நிலங்களையும், தனியார் நிறுவனங்கள் விலைக்கு வாங்கியது.
அந்நிலங்களில், கல் குவாரிகள் செயல்படுத்தப்பட்டன. கைவிடப்பட்ட கல் குவாரிகள், எதற்கும் பயன்பாடு இல்லாத இடமாக ஒரு புறமிருக்க, மரண பள்ளங்களாகவும் உள்ளன.
கைவிடப்பட்ட கல் குவாரிகள் அத்தனையும், மேய்ச்சல் நிலங்களை ஒட்டியே உள்ளன. இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள், குவாரிகளின் பக்கத்தில் செல்வதை தடுக்க முடியவில்லை.
அச்சமயங்களில், கால்நடைகள் குவாரி பள்ளங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைவதோடு, சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனால், கைவிடப்பட்ட கல் குவாரிகளால், கால்நடை பராமரிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பயன்பாடின்றி ஆபத்தானதாக உள்ள கைவிட்டபட்ட கல் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து, கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, முள் வேலி அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.