மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் 'ஜி - 20' நாடுகள் மாநாட்டை, இம்மாத இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜி - 20' நாடுகள் அமைப்பிற்கு, தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, கனடா உள்ளிட்டவை, இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதன் மாநாட்டை, முக்கிய பாரம்பரிய நினைவுச்சின்ன பகுதிகளில் நடத்தவும், பிரதான மாநாட்டை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில், புதுடில்லியில் நடத்தவும், மத்திய அரசு முடிவெடுத்தது.
கல்வி மேம்பாடு சார்பான தொடக்க நிலை மாநாடு, சென்னையில், ஜன., 31ம், பிப்., 1ம், 2ம் நாட்களில் சென்னையில் நடந்தது.
சென்னை மாநாட்டு பிரதிநிதிகள், பிப்., 1ல், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து, பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தனர்.
அறிவியல் சார்ந்த மாநாடு, ஜன., 30ம், 31ம் தேதிகளில், புதுச்சேரியில் நடந்தது. அதைத் தொடர்ந்து, 'ஜி - 20' நாடுகளின் மற்றொரு மாநாடு, மாமல்லபுரம் தனியார் விடுதியில், இம்மாதம் 14ம், 15ம் தேதிகளில் நடத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.