சதுரங்கப்பட்டினம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், பல நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன், ஆறு, ஏரி, கிணறு பாசனத்தில், மூன்று போகம் விளைவிக்கப் பட்டது.
நிலத்தடி நீர் பற்றாக்குறையாக உள்ளதால் தற்போது, விவசாயிகள் ஒரு போகமே பயிரிடுகின்றனர். இது ஒருபுறமிருக்க, விளைவித்த நெல்லை விற்பதிலும், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இயங்குகின்றன. நெல்லின் ரகத்திற்கேற்ப, 80 கிலோ மூடைக்கு, குறிப்பிட்ட விலை என, அரசு நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.
விவசாயிகளிடம் பல நாட்கள் தாமதித்து நெல் பெறுவது, எடையை குறைத்து மதிப்பிட்டு தொகையை குறைத்தும், தாமதித்தும் வழங்குவது, மூட்டை ஏற்றிச் செல்லும் லாரிக்கான கூடுதல் வாடகை உள்ளிட்ட சிக்கல்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்கவும், தங்கள் உழைப்பிற்கேற்ற தொகையை பெறவும், தனியாரிடம் ஆர்வத்துடன் விற்கின்றனர்.
அரிசி ஆலை தரப்பினர், மொத்த அரிசி வியாபாரிகள், நெல் அறுவடை பகுதிக்கு நேரடியாக வந்து, விவசாயிகளிடம் விலை பேசி வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து, சதுரங்கப்பட்டினம் விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கரில், 40 - 45 மூட்டை நெல் கிடைக்கும். அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அலைக்கழிக்கின்றனர். உரிய தொகை அளிப்பதில்லை. மூட்டைக்கு 50 - 75 ரூபாய் கமிஷனும் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்படுவதால் தான், நேரடியாக வந்து வாங்குவோரிடம் விற்கிறோம். பாப்பட்லா ரகத்திற்கு, மூட்டைக்கு 1,700 ரூபாய் கொடுக்கின்றனர். எங்களுக்கும் அலைச்சல்இல்லை. பணமும் உடனே கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.