காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒலிமுஹமதுபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நிழல் தரும் வகையில் பல்வேறு மரங்கள் உள்ளன.
இங்குள்ள ஒரு வேப்பமரத்தின் உச்சியில், நேற்று மாலை 4:00 மணியளவில், பட்டம் அறுந்த நுாலில், கால்கள், இறகுகள் என, உடல் முழுதும் சிக்கிய காகம் ஒன்று, அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி உயிருக்கு போராடியபடி கரைந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஒலிமுஹமதுபேட்டை பள்ளிக்கு சென்று, வேப்பமரத்தின் உச்சியில், 40 அடி உயரத்தில், நுாலில் சிக்கி பறக்க முடியாமல் பரிதவித்த காகத்தை கீழே கொண்டு வந்தனர்.
பின், காகத்தை விடுவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நுாலில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் விடுவித்ததும், காகம் அங்கிருந்து பறந்தது.
தீயணைப்பு வீரர்களுக்கு பள்ளி மாணவ -- மாணவியரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.