ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகிர்மான குழுவுக்கு
சப் - கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்குது
பொள்ளாச்சி, மார்ச் 3-
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நாளை, 4ம் தேதி நடக்கிறது. தேர்தலில், பகிர்மான குழு தலைவர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது.
பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்களும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 44 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. பி.ஏ.பி., பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 16 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.
இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நாளை, 4ம் தேதி புதிய ஆயக்கட்டு பாசன சங்க பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அலுவலராக சப் - கலெக்டர் பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பகிர்மான குழு எண், 1, 2, வேட்டைக்காரன்புதுார் கால்வாய் பகிர்மான குழு, சேத்துமடை மற்றும் ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகிர்மான குழு, என, மொத்தம், நான்கு பகிர்மான குழு தலைவர்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்குமான தேர்தல் நாளை நடக்கிறது.
பகிர்மான குழு தலைவர்கள் பதவிக்கான வேட்பு மனுக்களை, காலை, 8:30 முதல், 9:30 மணி வரை தாக்கல் செய்யலாம். காலை, 9:30 முதல், 10:00 மணி வரை வேட்பு மனுக்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுதல் பணி நடக்கும். காலை, 10:00 முதல், 10:30 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.
காலை, 10:45 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. காலை, 11:30 மணி முதல் மதியம், 12:15 மணி வரை, 45 நிமிடங்கள் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் உடனடியாக ஓட்டு எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, பகிர்மான குழுவின் உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்களை மதியம், 1:30 முதல், 2:30 மணி வரை தாக்கல் செய்யலாம். மதியம், 2:30 முதல், 3:00 மணி வரை வேட்பு மனுக்களை கூர்ந்தாய்வு செய்து, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
மாலை, 3:00 முதல், 3:30 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். மாலை, 3:45 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மாலை, 4:30 முதல், 5:15 மணி வரை, தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் உடனடியாக, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், சப் - கலெக்டர் தலைமையில் நடக்கிறது. 16 பாசன சபை தலைவர்கள், வெற்றி பெற்ற அசல் தேர்தல் சான்றிதழ்களுடன், தேர்தலில் பங்கேற்க வேண்டும்,' என்றனர்.
பகிர்மான குழு தலைவர் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பாசன சபை நிர்வாகிகள் காத்திருந்தனர். அறிவிப்பு வெளியானதையடுத்து, தேர்தல் பணிகளில் பாசன சபை தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பகிர்மான குழு தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்தல் முடிந்ததும், திட்டக்குழு தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்நிலையில், தேர்தலில், பகிர்மான குழு தலைவர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது.