கூடலுார்:கூடலுார் அருகே 'மெத்தனால்' என்ற ரசாயன திரவத்தை ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளானதில் 3000 லிட்டர் மெத்தனால் சாலையில் கொட்டியது. தீயணைப்புத் துறையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடுக்கு மெத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று சென்றது.
காலை 9:00 மணிக்கு நீலகிரி மாவட்டம் கூடலுார் நாடுகாணி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் டேங்கர் லாரி சேதமடைந்தது; அதிலிருந்த மெத்தனால் சாலையில் கொட்டியது.
அப்பகுதியில் தீ விபத்து அபாயம் நிலவியதால் உடனடியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எல்லைப்பகுதி என்பதால் தமிழகம் - கேரளா - கர்நாடகா வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து சேதமடைந்த டேங்கர் லாரியை ஆய்வு செய்து மெத்தனால் ரசாயனம் கொட்டுவதை நிறுத்தினர்.
தொடர்ந்து டேங்கர் லாரி நந்தட்டி பகுதிக்கு நகர்த்தி செல்லப்பட்டு வெப்பத்தை தணிக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.
தீயணைப்பு துறையினர் கூறுகையில் 'டேங்கரில் 30 ஆயிரம் லிட்டர் மெத்தனால் இருந்தது. அதில் 3000 லிட்டர் சாலையில் கொட்டியது. துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது' என்றனர்.