பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
வேட்டைக்காரன்புதுார், டாப்சிலிப் அருகேயுள்ள கோழிகமுத்தியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்,26. இவர், சம்பளம் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில், சேத்துமடையில் உள்ள ஒர்க் ஷாப்க்கு சென்று கொண்டு இருந்தார்.
தம்மம்பதி - கோழிப்பண்ணை ரோட்டில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக திடீரென பைக்கில் இருந்து கீழே விழுந்தார். காயமடைந்த அவர், வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்றவர் கைது
பொள்ளாச்சி அருகே, பெத்தநாயக்கனுார் பகுதியில் கோட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பெத்தநாயக்கனுாரை சேர்ந்த சுரேஷ்,38, என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 40 லாட்டரி சீட்டுகள் மற்றும், 530 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பழங்குடியின சிறுவர்கள் மாயம்
வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை செல்லும் வழித்தடத்தில், மரப்பாலம் செட்டில்மென்ட் உள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, மூன்று சிறுவர்கள், கடந்த, மாதம் 26ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று சிறுவர்களையும் தேடுகின்றனர்.
பால் விற்பனையாளர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த பால் விற்பனையாளர் சம்பத்குமார்,36. இவருக்கு திருமணமாகி மனைவி சித்ரா, இருமகள்கள் உள்ளனர்.சம்பத்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது, குடி போதையில் வந்ததால், அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த சம்பத்குமார், தனது நண்பர்களுடன் சென்று தங்கி இருந்தார். இந்நிலையில், மனவிரக்தியில் சாணிப்பவுடர் கரைசல் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அவதுாறாக பேசியவர் மீது வழக்கு
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவரும், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.பசீர் அகமது. இவரை, கிணத்துக்கடவு செம்மொழி நகரை சேர்ந்த ஜாகீர் உசேன், பள்ளி வாசல் தேர்தல் சம்பந்தமாக மொபைல்போனில் அவதுாறாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து, இந்திய தேசிய லீக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் குனியமுத்துார் இடையர்பாளையத்தை சேர்ந்த கிதர்முகமது கொடுத்த புகாரின் பேரில், ஜாகிர் உசேன் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.