தேனி: மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 21 பள்ளிகளை தேர்வு செய்து, வளாகங்களில் உள்ள உயர் அழுத்த மின்ஒயர்கள், மின்கம்பங்களை மாற்றி மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தில் மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளி வளாகங்களில் வகுப்பறைகள், கட்டடங்களுக்கு மேற்பகுதியில் உயர் அழுத்த மின் ஒயர்கள் செல்வதால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது என மின்வாரியத்திற்கு புகார்கள் வந்தன.
மின் விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிகளின் விபரம் வழங்க மின்வாரியம் பட்டியல் கோரியது. சி.இ.ஓ., உத்தரவில் மாவட்ட முழுவதும் பள்ளிகளில் ஆய்வு செய்து உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பள்ளி வளாகங்கள் கண்டறியப்பட்டு அப்பட்டியல் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பேரில் முதற்கட்டமாக 21 பள்ளிகளில் சீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டன. இதில் ஆண்டிபட்டி ஒன்றியம் குன்னுார் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்திற்கு மேல் சென்ற மின் ஓயர்கள், உட்புறத்தில் இருந்த ஆபத்தான மின் லைன் மாற்றி அமைக்கப்பட்டது. இதே போன்று 4 பள்ளிகளில் மின் லைன் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன.
அரசு, உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியரின் ‛சுய விருப்ப ஒப்பந்தம்' படிவம் பெற்று வாரியமே சொந்த செலவில் மின்வழித்தடங்கள், மின்கம்பங்களை மாற்றப்படும்.
மற்ற பள்ளிகளுக்கு பள்ளி நிர்வாகம் செலவு தொகையினை செலுத்திட வேண்டும். மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் கூறுகையில், ‛தற்போது வரை 4 பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்துள்ளன. 7 பள்ளிகளில் பணிகள் நடக்க உள்ளன. மீதியுள்ள 10 பள்ளிகளில் விரைவில் பணிகள் துவங்க உள்ளன.', என்றார்.